கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியில் வசிக்கும் ஷிம்ஜிதா முஸ்தபா(35) என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில், பஸ் பயணத்தின்போது ஒரு நபர் தவறான நோக்கத்துடன் தன்னைத் தொட்டதாகத் தெரிவித்திருந்தார். அந்த நபரின் வீடியோவையும் ஷிம்ஜிதா முஸ்தபா வெளியிட்டார். அந்த வீடியோவில் இருந்த நபர் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக்(42) எனத் தெரியவந்தது.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தீபக் அந்த வீடியோவைப் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த தீபக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இளம்பெண் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக அந்தப் பதிவைப் போட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ராகுல் ஈஸ்வர் என்பவர் டி.ஜி.பி-க்குப் புகார் அனுப்பியிருந்தார்.