கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. 14 வருவாய் மாவட்டங்களில் 14 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 6 மாநகராட்சி மேயர்கள், 86 நகராட்சி தலைவர்கள், 152 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 941 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுவதற்கான தேர்தல் இது.
மொத்தமுள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளில் 23,576 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் கருத்து தெரிவித்த கேரளாவை ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், “இந்த உள்ளாட்சி தேர்தலில் சரித்திர முன்னேற்றம் ஏற்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் உள்ளாட்சிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சுமார் 30 ஆண்டுகளாக சி.பி.எம் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி உள்ளது. 101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.