கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு யேமனுக்குச் சென்றார். அங்கு பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியுடன் இணைந்து சொந்தமான கிளினிக் ஒன்றை திறந்தார்.
கிளினிக் நிதியை மஹ்தி தவறான பயன்படுத்தியதால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிமிஷாவின் பாஸ்போர்ட்டை கொடுக்காமல் மஹ்தி தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகராறில், மஹ்தியை கொலை செய்த நிமிஷா யேமனைவிட்டு தப்ப முயற்சித்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் 2018 ஆம் ஆண்டில் குற்றவாளியாக நிமிஷா அறிவிக்கப்பட்டார். யேமன் தலைநகர் சனா நீதிமன்றத்தால் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டால் மரண தண்டனை ரத்து செய்வதற்கான வாய்ப்பை யேமன் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, யேமனுக்கு சென்றுள்ள நிமிஷா பிரியாவின் தாய் பிரேமா குமாரி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் இழப்பீடு தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய தூதரகம் சார்பில் வழக்கறிஞரும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இழப்பீடு தொகையை ஏற்க பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், மரண தண்டனையை நிறைவேற்ற யேமன் அதிபர் ரஷீத் முகமது அல்-அம்மி ஒப்புதல் அளித்துள்ளார்.