ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி விவகாரம்
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா உணவகங்களின் நிறுவனர் சீனிவாசன் பேசுகையில், ‘இனிப்புக்கு குறைவான ஜிஎஸ்டியும், காரத்துக்கு அதிகமான ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பில் போடுவதில் சிரமம் உண்டாகிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால், அதில் வைக்கும் க்ரீமுக்கு ஜிஎஸ்டி போடப்படுகிறது’ என்று பேசினார்.
இதையும் படிக்க: அந்தமான் தலைநகர் பெயரை ‘ஸ்ரீ விஜயபுரம்’ என மாற்ற முடிவு!
மன்னிப்பு கேட்கும் விடியோ வைரல்
இதைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் விடியோ நேற்றிரவு பாரதிய ஜனதா கட்சியினரால் ஊடகங்களில் பகிரப்பட இன்று வைரலானது.
இந்த விடியோவில், நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த சீனிவாசன், “நான் எந்த கட்சியைச் சார்ந்தவனும் அல்ல. வருந்தும்படி, பேசியதற்கு மன்னித்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இணையதளவாசிகள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க:பிரதமர் மோடி 74-வது பிறந்த நாள்: அஜ்மீர் தர்காவில் 4000 கிலோ சைவ விருந்து!
பிரியங்கா காந்தி எக்ஸ் பதிவு
இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், “கேள்வி கேட்டால் அவமானப் படுத்தப்படுகிறார்கள் இதுதான் மோடி அரசின் பதிலாக இருக்கிறது.
கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர், மோடி அரசின் ஜிஎஸ்டி கொள்கைகள் குறித்து நிதி அமைச்சரிடம் கேள்வி கேட்டதற்காக அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
உணவகத்தின் உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து நியாயமான கேள்வியைக் கேட்டார். ஆனால், அதற்காக கேலி செய்யப்பட்டார். கேமராவுக்கும் முன்னாள் கட்டாயமாக அவரை மன்னிப்பு கேட்க வைத்தது மோடி அரசின் தந்திரமாகும்.
இதையும் படிக்க:விராட் கோலிக்கு எதிரான சவால்களை மிகவும் விரும்புகிறேன்: மிட்செல் ஸ்டார்க்
சிறு வணிகர்களும், சிறு, குறு, நடுத்தர தொழில் செய்பவர்களும் மோடி அரசின் பேரழிவுக் கொள்கைகளுக்குள் மிகவும் சிக்கித்தவித்து வருகின்றனர். அவர்கள் பணமதிப்பிழப்பு கொள்கை மற்றும் ஜிஎஸ்டியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மட்டும் குறைந்த வரி விதிப்பு மற்றும் கடன் தள்ளுபடி போன்ற அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றனர்.
எளிமையான ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், மத்திய அரசோ பிரச்னைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு அரசுக்கு எதிராக இருப்பவர்களை அடக்க நினைக்கிறது.
மக்களைப் புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, பணக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமான ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.