அடுப்பை பெரிதாக எரியவிட்டுச் சமைக்கும்போது, எரிபொருள் அதிகம் வீணாகும். உணவுப்பொருள் கொதிநிலைக்கு வந்ததும், அடுப்பை மீடியம் அல்லது குறைந்த தணலில் வைத்தே சமைக்க வேண்டும்.
எப்போது மூடிவைத்துச் சமைக்க வேண்டும், எந்த அளவு தண்ணீர் விட்டுச் சமைக்க வேண்டும் என்பதில் சமைக்கும் எல்லோருக்கும் தெளிவு இருக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் வைத்துக் கொதிக்கவைத்து, மீதமாகும் நீரைக் கொட்டுவது தவறு. அளவான தண்ணீர் விட்டு, மூடி வைத்துச் சமைப்பதுதான் சரியானது.

தாளிப்பு என்பது தினசரி சமையலில் தவிர்க்க முடியாதது. ஒவ்வோர் உணவுக்கும் தினம் தனித்தனியே தாளிப்பதால் எரிபொருள் வீணாகும்.
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்ந்த தாளிதம் தனியேவும், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்ந்த தாளிதம் தனியேவும் தயார்செய்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளலாம். எந்தச் சமையலுக்கு எது தேவையோ, அதைப் பயன்படுத்தலாம்.
மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் அதை அதிகபட்சமாக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பயன்படுத்தப் பழக வேண்டும். காய்கறிகளை வேக வைக்கக்கூட அதைப் பயன்படுத்தலாம். இண்டக்ஷன் ஸ்டவ் இன்று தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதையும் பயன்படுத்தலாம். அப்பளம், வடகம் போன்றவற்றைப் பொரிக்கவும் பயன்படுத்தலாம்.