திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு 1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது.
அமலாக்கத்துறையின் அக்கடிதத்தில், கே.என்.நேரு அமைச்சராக இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கட்டட நிர்மாணம், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங், NABARD (வேளாண்மை வங்கி மற்றும் கிராம வளர்ச்சி வங்கி) திட்டங்கள், தூய்மைப்பணியாளர்கள் பணிக்கான அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள், தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புத் திட்டங்கள், நீர்/குளம் வேலைக்கான ஒப்பந்தங்ககள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் முன்பே யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது.
லஞ்சமாகப் பெறப்பட்ட பணப்பரிவர்த்தனை வெளிநாடுகளிலும், ஹவாலா மூலமும் நடந்திருக்கலாம் என்று கூறுகிறது அமலாக்கத்துறை.