“தனித்துப் போட்டியிடலாம்”
`அன்புமணி அணி’ `ராமதாஸ் அணி’ என இரண்டாக பிரிந்து கிடக்கிறது பா.ம.க. அதேசமயம் கட்சியின் சின்னமும், பெயரும் அன்புமணியிடம் இருப்பதால், பெரும்பாலான நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர் அணியில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
அதில் அப்செட்டான மருத்துவர் ராமதாஸ், தி.மு.க பக்கம் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், `பா.ம.க இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் வி.சி.க இருக்காது’ என்று திருமாவளவன் திடமாக நின்றதால், அந்தக் கதவும் அடைக்கப்பட்டுவிட்டது.
இதற்கிடையில்` `பா.ம.க-வின் பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்துவதற்கும், பா.ம.க தலைவர் என அவரைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கும் தடை விதிக்க வேண்டும்’ என்றும் மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில்தான் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு தொடங்கிய அந்தக் கூட்டத்தில் `ராமதாஸ் பா.ம.க அணி’யின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, சேலம் மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ அருள், பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையது மன்சூர் உசேன், ராமதாசின் பேரன் முகுந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, `தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்குச் செல்வதற்கான சூழல் இல்லாததால், நாம் தனித்துப் போட்டியிடலாம். அதன்மூலம் தங்களது வாக்கு வங்கியை நிரூபித்து சின்னவருக்கு பாடம் கற்பிக்கலாம்’ என்று சிலர் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
ஆனால், `அப்படி செய்தால் நாம் மேலும் பலவீனமாக வாய்ப்பிருக்கிறது’ என்று அதை நிராகரித்திருக்கிறார் ராமதாஸ். அதையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அல்லது சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.
“ஓரிரு நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்”
ஆனால், `அவர்களுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தேர்தலையே நாம் புறக்கணித்துவிடலாம்’ என்று ஒரு தரப்பினர் கூறியிருக்கிறார்கள். கூட்டம் முடிவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ அருள், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஏப்ரல் 6-ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. அதனால் கூட்டணி குறித்து அய்யா அறிவிப்பார். சொந்த வேலை காரணமாக அய்யாவிடம் சொல்லிவிட்டுத்தான் செல்கிறேன். வலிமையான கூட்டணி அமைக்கும் வாய்ப்பு பா.ம.க-விடம் இருக்கிறது. எங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், எங்களில் பலரை எம்.எல்.ஏ-வாக தமிழக சட்டப்பேரவைக்குள் அனுப்பி வைப்பார்.
சேலம் மேற்கு தொகுதியில் உறுதியாக போட்டியிட்டு வெற்றிபெறுவேன். அது மாம்பழம் சின்னத்திலா அல்லது வேறு சின்னத்திலா என்பதை காலம் முடிவு செய்யும். தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியதைப் போல நீதிமன்றத்தையும் ஏமாற்ற நினைக்கிறார் அன்புமணி.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்” என்றார். கூட்டம் முடிந்த பிறகு மாலை 7 மணிக்கு வந்த ஜி.கே.மணி, “கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார் அய்யா. யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிப்போம்.
அந்த வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யாருடன் கூட்டணி என்று இப்போது சொல்ல முடியாது. அதேபோல எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை என்றும் சொல்லிவிட முடியாது” என்றவரிடம், `தேர்தல் அரசியலில் ராமதாஸ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறாரா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “மருத்துவர் அய்யாவின் சக்தி என்ன என்பது மக்களுக்குத் தெரியும். கட்சியின் நிலை தற்போது சரியாக இல்லாததால் நெருக்கடியாக இருக்கிறது. இல்லையென்றால் முன்பே கூட்டணியை அறிவித்திருப்போம்” என்றார்.