நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் கைதான ஷரீஃபுல்லுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் நீடித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஷரீஃபுல்ல போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் விசாரணைக்காக அவரது காவலை இரண்டு நாள்கள் நீட்டிக்குமாறு போலீஸார் கோரினர்.
குற்றம் சாட்டப்பட்டவர் பத்து நாள்களுக்கு மேல் போலீஸ் காவலில் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. விசாரணை முடிந்துவிட்டது, காவலில் வைப்பதற்கான புதிய காரணம் எதுவும் இல்லை. அவ்வாறு புதிதாக ஏதேனும் தெரியவந்தால், அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் போலீஸார் அவரை மீண்டும் காவலில் வைக்க கோரலாம் என்று நீதிபதி கூறினார்.
தாணே அருகே கைது செய்யப்பட்ட ஷரீஃபுல்ல, வங்கதேசத்தைச் சேர்ந்தவர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு தனது பெயரை முகமது ஷரீஃபுல்ல இஸ்லாம் ஷெஹ்சாத்தை `பிஜாய் தாஸ்’ என்று மாற்றிக்கொண்டார்.
மும்பையில் கடந்த 16-ஆம் தேதி அதிகாலை சைஃப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த ஷரீஃபுல், நடிகரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.
படுகாயமடைந்த சைஃப் அலி கானை வீட்டுப் பணியாளர்கள் மீட்டு, ஆட்டோவில் ஏற்றி பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஐந்து நாள்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து வீடுதிருப்பினார்.