கைதிகள் தயாரித்த பொருட்களில் பண மோசடி: மதுரை மத்திய சிறை உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை | Anti-corruption police raid 11 locations

1345733.jpg
Spread the love

சென்னை: சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச் சாட்டில் சென்னை, மதுரை உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மத்திய சிறையிலுள்ள கைதிகள், எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. அதன் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி சிறை கைதிகளுக்கு ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் வெளியிலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உண்மையான சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு வாங்கியதாகவும், அரசுத் துறை அலுவலகங்களில் குறைவான விலைக்கு விற்றதாகவும் போலி பில்கள், ஆவணங்கள் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும் தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு புகார்கள் சென்றன.

இந்த புகார்களின் அடிப்படையில் 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலும் சுமார் ரூ.1.63 கோடிமுறைகேடு நடந்து இருப்பதாகவும், இதுதொடர்பாக மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா (தற்போது கடலூர் சிறை எஸ்.பி.), கூடுதல் எஸ்.பி. வசந்தகண்ணன் (தற்போது பாளையங்கோட்டை கூடுதல் எஸ்.பி.), நிர்வாக அதிகாரி தியாகராஜன் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்ததாக மதுரையைச் சேர்ந்த ஜபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னை சீனிவாசன், சென்னை சாந்தி, நெல்லை சங்கரசுப்பு, தன லட்சுமி, சென்னை வெங்கடேஸ்வரி ஆகிய 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் சூரியகலா கடந்த டிச.12-ம் தேதி வழக்கு பதிவு செய்தார்.

இவ்வழக்கு தொடர்பாக மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று சோதனை நடத்தினர். டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் குமரகுரு, சூரியகலா, ரமேஷ்பிரபு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை 7 மணிக்கு மதுரை மத்திய சிறைக்குள் நுழைந்தனர். சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக முறைகேடு வழக்கு தொடர்பாக சிறைத் துறையில் உள்ள பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனர். அலுவலர்கள், ஊழியர்களிடமும் விசாரித்தனர். வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை சிறையில் இருந்து கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

சென்னை, தேனி: இதேபோல், பாளையங்கோட்டை மத்திய சிறை கூடுதல் எஸ்.பி. வசந்தகண்ணனின் மாமனார் வீடு தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ளது. இங்கு மதுரை லஞ்சஒழிப்புத்துறை போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரை தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

வசந்தகண்ணனின் மாமனார் சிவா உள்ளிட்ட உறவினர்கள் பலரிடமும் விசாரணை நடந்தது. சென்னையில் மண்ணடி, கொடுங்கையூர் உட்பட 4 இடங்களில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

வேலூர், திருவண்ணாமலை: வழக்கின் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவின் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த ராந்தம் கிராமத்தில் உள்ள வீட்டில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமமாலினி தலைமையிலான காவலர்கள் சோதனை நடத்தினர்.

அதேபோல், வழக்கில் 3-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள மதுரை மத்திய சிறையின் முன்னாள் நிர்வாக அதிகாரி தியாகராஜன் என்பவரின் வீடு வேலூர் அரியூர் அம்மையப்பன் நகரில் உள்ளது. தற்போது அவர் வேலூர் மத்திய சிறை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் மைதிலி தலைமையிலான காவலர்கள் சுமார் 6 மணி நேரம் சோதனை நடத்தினர். நேற்று நடைபெற்ற சோதனையின் முடிவில் வழக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *