ராஜபாளையம்: தமிழகத்தில் 3 லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும் என ஏ.ஐ.டி.சி மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யு.சி தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் மாநில குழு கூட்டம் இன்று (வியாழக் கிழமை) நடைபெற்றது. மாநிலத் தலைவர் மணி மூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் ராமசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் லிங்கம், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாநில குழு கூட்டத்தில் கைத்தறி நெசவுத் தொழிலை பாதிக்கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் தேங்கி உள்ள உற்பத்தி பொருட்களை கோ-ஆப் டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்து மக்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். மூலப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும். கைத்தறிகளுக்கு ஒதுக்கீடு செய்த 11 ரக ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்.
கைத்தறி உற்பத்தி பொருட்களுக்கு அடக்க விலைக்கு ஏற்ப ரிபேட் மானிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவை ரிபேட் மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கைத்தறிக்கு கூலி உயர்வு வழங்குவது போல் பெடல் தரிக்கும் கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
300 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி பூங்கா, 58 வயதான கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 3 லட்சம் கைத் தறி நெசவாளர்களை கொண்ட கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும், என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இந்நிகழ்வில், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் முத்துமாரி, அமைப்புச் செயலாளர் ரவி, முன்னாள் எம்எல்ஏ பொன்னுப் பாண்டியன், சிபிஐ நகர செயலாளர் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.