இந்த நிலையில், நேற்று காலை கொங்கு பெருமாள் கோவிலுக்கு குமாரபாளையம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி அதிமுக நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார். பின்னர், கோவிலில் சிறிது நேரம் காத்திருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்கு எம்எல்ஏ சந்திரகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கோவிலுக்கு வந்தனர். அமைச்சர் முத்துசாமி வணக்கம் தெரிவிக்க, அவரை முன்னாள் அமைச்சர் தங்கமணி கை கொடுத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பின்னர், இருவரும் இணைந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தை அமைச்சர் முத்துசாமி மற்றும் தங்கமணி அரைமணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு இருவரும் தனித்தனியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நீண்டகாலமாக பூட்டி இருந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று திறந்துள்ளது. கோவில் வளாகத்தில் மேலும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொகுதியின் எம்.எல்.ஏ தங்கமணியுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அரசியல் எதுவும் பேசவில்லை” என்றார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து, இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் அங்கிருந்து வருவார்கள் என்று கூறிய நிலையில், அமைச்சர் முத்துசாமியை முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்து அரைமணி நேரம் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.