புதுச்சேரி: புதுச்சேரி முழுவதும் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி அதிமுக உரிமை மீட்புக் குழு சார்பில் கொசு வலையை போர்த்திக்கொண்டு முற்றுகை போராட்டம் நடந்தது.
மழைக்காலம் தொடங்கியதன் காரணமாக புதுச்சேரி முழுவதும் கொசுக்கள் அதிக அளவில் உருவாகி பொது மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் மாநில செயலர் முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில், புதுச்சேரி குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மலேரியா துணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
கொசுவலை போர்த்திக்கொண்டு மற்றும் கொசு பேட் ஆகியவற்றை கையில் ஏந்தியவாறு “ஒழித்திடு, ஒழித்திடு – கொசுக்களை ஒழித்திடு!”, “அடித்திடு, அடித்திடு – கொசு மருந்து அடித்திடு!” எனக் கோஷங்கள் எழுப்பியவாறு, அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து, திட்ட அதிகாரி முருகனை நேரில் சந்தித்து, உடனடியாக மாநிலம் முழுவதும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர், “சமீப காலங்களில் பெய்த மழை காரணமாக நீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்து, பொதுமக்கள், சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மாநிலம் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணிகளை விரைவுபடுத்தி, சுகாதார அவசர நிலை ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைத்து போதிய மருந்துகளை வைத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாதார அலுவலங்களை முற்றுகையிடுவோம்.” என்று கூறினார்.