கொடுத்த காசுக்கு மேல் என்னமா கூவுறான்: யாரைச் சொல்கிறார் ஸ்டாலின்!

dinamani2F2025 06 192Fh3eiyeoc2Fmkstalin
Spread the love

திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவைக் காட்சியில் வரும், “கொடுத்த காசுக்கு மேல் என்னமா கூவுறான்” என்ற வசனத்தைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 10) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

”பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியில், ஆமாம் மத்தியில், நமக்கு இடையூறாக இருக்கும் மத்திய அரசையும் சமாளித்து, இவ்வளவு சாதனைகளைச் செய்திருக்கிறோம். தொடர்ந்து செய்யதான் போகிறோம். இதையெல்லாம் பார்த்து, தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இப்போது என்ன செய்கிறார்? தமிழ்நாட்டை மீட்போம் – சாரி, தமிழகத்தை மீட்போம் என்று ஒரு பயணத்தை தொடங்கி இருக்கிறார்! ஏனென்றால், தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று சொல்லுகின்ற கூட்டத்துடன், இப்போது அ.தி.மு.க.வை சேர்த்துவிட்டார். அ.தி.மு.க-வை மீட்க முடியாத இவர் தமிழகத்தை மீட்கப் போகிறாராம்!

திருவாளர் பழனிசாமி அவர்களே, உங்களிடம் இருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டது. கூவத்தூரில் ஏலம் எடுத்து, கரப்ஷன் – கலெக்‌ஷன் – கமிஷன் என்று தமிழ்நாடே பார்க்காத அவலமான ஆட்சியை நடத்தினீர்கள்! கொஞ்ச நஞ்சமல்ல – செய்த குற்றங்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள, பா.ஜ.க.விடம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழர்களையும், அவர்களின் உரிமைகளையும் அடகு வைத்தீர்கள். நீங்கள் செய்த கேடுகள் ஒன்றா – இரண்டா? அதையெல்லாம் சரிசெய்து, இன்று இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நம்பர் ஒன், 9.69 விழுக்காடு! இதை நான் சொல்லவில்லை. இதை மத்திய அரசே சொல்லியிருக்கிறது. இதை மத்திய அரசால் இதை மறைக்க முடியவில்லை! மறுக்க முடியவில்லை! தலைநிமிர்ந்த தமிழ்நாடாக இன்றைக்கு வளர்த்தெடுத்திருக்கிறோம்!

வெளிமாநில மக்கள் எல்லாம் தமிழ்நாட்டைப்பற்றி பெருமையோடு பேசுகிறார்கள்! இதையெல்லாம், உங்களுக்கு எப்படி தெரிய போகிறது? உங்களுக்கு தெரிந்தது எல்லாம், துரோகம் செய்வது மட்டும்தான். உங்களை கொண்டு வந்தவருக்கு துரோகம் செய்து, வெளியில் அனுப்பினீர்கள்! உங்களை நம்பி வழங்கப்பட்ட கட்சிக்கும், அந்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்து, கூட்டணி வைத்தீர்கள்! ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து, தமிழ்நாட்டு மக்கள் மொத்த பேருக்கும் துரோகம் செய்தீர்கள்!

நாங்கள் கேட்பது – மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி கொடுப்பது இல்லை. நாம் கொடுக்கும் ஜி.எஸ்.டி – அந்த நிதியையும் நமக்கு ஒழுங்காக திருப்பி தருவதில்லை. சிறப்புத் திட்டங்களும் எதுவும் கிடையாது. ஏன்… மத்திய அரசின் திட்டங்களுக்கே நாம்தான் நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறோம்! நம்முடைய மாணவர்கள் படிக்க தேவையான பள்ளிக்கல்வி நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் தரக்கூடிய நிதியை நமக்கு மட்டும் வழங்கவில்லை.

தமிழ் வளர்ச்சிக்கு நிதி இல்லை! தமிழர்களின் பெருமை வெளியே வரக்கூடாது என்று கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கிறார்கள்! அதுமட்டுமா! தொகுதி மறுவரையறை பிரச்னை! இப்போது, வாக்காளர் பட்டியல் குளறுபடி ஆகியிருக்கின்ற பிரச்னை! இப்படி, தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, எப்படி உங்களால் கூச்சமே இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது?

அதுமட்டுமல்ல, வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார் – எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. சமீபத்தில் கூட என்ன பேசியிருக்கிறார்? இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பள்ளி, கல்லூரி கட்டக்கூடாதாம். இதற்கு முன்னால், பா.ஜ.க.வுக்கு வெறும் ‘டப்பிங் வாய்ஸ்’தான் பேசிக்கொண்டு இருந்தார்… இப்போது, பா.ஜ.க.வின் ஒரிஜினல் வாய்ஸ்-ஆகவே பேச ஆரம்பித்துவிட்டார்! அறநிலையத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்குவதற்கு சட்டம் இருக்கிறது! இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படி தான் முதலமைச்சராக இருந்தீர்களோ என்று எனக்கு புரியவில்லை.

மறைந்த பக்தவத்சலம் காலம் தொடங்கி, ஏன்! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களே முதலமைச்சராக இருந்தபோது, பழனி ஆண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியை திறந்திருக்கிறார். அந்தக் கல்லூரிக்கு கூடுதல் கட்டடத்தை சென்ற முறை நீங்களே திறந்து வைத்திருக்கிறீர்கள். அப்போது ஏதாவது மயக்கத்தில் போய் திறந்து வைத்துவிட்டு வந்தீர்களா? இப்போது நாங்கள் கல்லூரி தொடங்கினால் தவறா?

பா.ஜ.க. தலைவர்களே இது போன்று, “கல்லூரி தொடங்கக் கூடாது” என்று பேசுவது இல்லை. ஆனால், பழனிசாமி மட்டும் பேசுகிறார். இதைப் பார்த்தால் ஒன்றுதான் எனக்கு நினைவிற்கு வருகிறது – ஒரு திரைப்படத்தில் வடிவேலு காமெடி ஒன்று வரும், அது என்னவென்றால், “கொடுத்த காசுக்கு மேல் என்னமா கூவுறான்” அந்த மாதிரி பா.ஜ.க.காரங்களே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரைக்கம், தமிழ்நாடு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு திராவிட மாடல் அரசு செய்திருக்கக்கூடிய சாதனைகளின் பட்டியல் பெரியதாக இருக்கும் – நான் பழனிசாமியை நேரடியாகவே கேட்கிறேன். ஏன் படிப்பு என்றால், உங்களுக்கு அவ்வளவு கசக்கிறது? கல்விக்காக உண்மையிலேயே குரல் எழுப்புவது போன்று இருந்தால் – கும்பகோணத்தில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரால் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் சட்டமியற்றி அனுப்பி வைத்தோம். இரண்டு மாதம் ஆகியிருக்கிறது. அதற்கு ஆளுநர் இதுவரையில் அனுமதி தராமல் இருக்கிறார். நான் கேட்டேன். இதைவிட ஆளுநருக்கு என்ன வேலை? இதற்காக குரல் எழுப்ப எதிர்க்கட்சித் தலைவருக்கு நெஞ்சுரம் இருக்கிறதா? நீங்கள் மத்திய அரசிடம் கேட்டாலும் – கேட்காவிட்டாலும், நாங்கள், உறுதியோடு சொல்கிறேன் – சட்டரீதியாக எதிர்கொண்டு, கலைஞர் பல்கலைக்கழகத்தை நிச்சயமாக, உறுதியாக அமைப்போம்!

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே, மக்களுக்கு எதிரான கருத்துகளைப் பேசிக்கொண்டு, தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகங்களை செய்துகொண்டு, மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்ற நப்பாசையோடு நீங்கள் என்ன பயணம் செய்தாலும், மக்கள் ஒருபோதும் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! ஏனென்றால், அதுதான் உங்கள் டிராக் ரெக்கார்ட்! துரோகங்கள்தான் உங்கள் ஹிஸ்ட்டரி!

தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற எதிரிகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும்… மக்களான நீங்கள், எங்களோடு ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று ஒற்றுமையாக நிற்க வேண்டும்! நம்முடைய மண் – மொழி – மானம் காக்க, என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும் – மண்ணின் மைந்தனான கலைஞரின் கொள்கை வாரிசான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் துணை நிற்போம்! என்று பேசினார்.

Chief Minister Stalin has criticized Opposition Leader Edappadi Palaniswami, citing the line in the film Vadivelu’s comedy scene, “What will he say about the money he gave?”

இதையும் படிக்க: கர்நாடகத்தில் மாரடைப்பு மரணங்கள்: மருத்துவமனைகளில் குவியும் மக்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *