கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ கடந்த 4 நாட்களா பற்றி எரிந்தது. இதில் சுமார் 500 ஏக்கர் வனப்பரப்பில் இருந்த மரங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள் எரிந்து கருகின. மேலும் காட்டுத் தீ காரணமாக மின்கம்பங்கள் மற்றும் வயர்களும் சேதம்அடைந்தன. இதனால் சில இடங்களில் மின்சார வினியோகமும் தடைபட்டது.
காட்டுத் தீ
வனத்துறையினர் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து போராடி காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளனர். தற்போது காட்டுத்தீ முழுவதும் கட்டுக்கு வந்தாலும் நிலமை இன்னும் முழுவதும் சீராகவில்லை. மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் வயர்களை சரி செய்து தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். மேலும் இன்னும் சில இடங்களில் கடும் வெப்பம் காரணமாக அவ்வப்போது தீ பற்றுவதாக கூறப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு தடை
இதையடுத்து கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் காட்டுத்தீ தொடர்வதால், பூம்பாறையில் இருந்து கூக்கல், மன்னவனூர் செல்லும் கனரக வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
ஆனால் உள்ளூர் மக்களுக்கு தடை இல்லை. இந்த தடை நாளை(மே 1-ந்தேதி)மற்றும் நாளை மறுதினம்(2-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் அமலில் இருக்கும் என்று மாவட்ட வன அலுவலர் தெரிவித்து உள்ளார். மேலும் இது தொடர்பாக மாவட்ட வனத்துறையினர் அறிக்கையும் வெளியிட்டு உள்ளனர்.