கொடைக்கானல்: கொடைக்கானலில் பனி மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து இன்று ரம்மியமான சூழ்நிலை காணப்பட்டது. இருப்பினும் தொடர் விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணிகள் வெளியேறத் தொடங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. சிலர் அறைகள் எடுத்து இரண்டு, மூன்று நாட்கள் தங்கியும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர். இதனால் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வாகன நெரிசல் காணப்பட்டது. கடந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட அதிகம் பெய்ததால் கொடைக்கானல் மலைப்பகுதிகள் கூடுதல் பசுமையாக காணப்படுவது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் தங்கி ரசித்த சுற்றுலா பயணிகள் இன்று விடுமுறை முடிந்ததால், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இருந்து தங்கள் ஊர்களுக்கு பிரியாவிடை பெற்றுச் சென்றனர்.
கடந்த சில தினங்களை விட இன்று பனிமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தது. இன்று காலை முதலே கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் பனிமூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் தூண்பாறையை காண முடியவில்லை. இதேபோல் குணா குகை பகுதியில் எதிரே நடந்து வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது.
மோயர் பாய்ண்ட், கோக்கர்ஸ் வாக் பகுதியில் பள்ளத்தாக்குகள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது. வாகன ஓட்டிகள் பகலிலேயே முகப்பு விளக்கு மற்றும் மஞ்சள் விளக்குகளை எரியவிட்டுச் சென்றனர். அதிக பனிமூட்டத்துடன் இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
பனிமூட்டத்துடன் சாரல் மழையும் சேர்ந்து கொண்டதால் ரம்மியான சூழல் நிலவியது. கொடைக்கானலில் பகலில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக இரவில் 15 டிகிரி செல்சியசும் நிலவியது. காற்றில் ஈரப்பதம் 91 சதவீதம் இருந்ததால் இரவில் குறைந்த வெப்பநிலை காரணமாக அதிக குளிர் உணரப்பட்டது.
இந்த குளிர் சீசனில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் கொடைக்கானல் வந்து தங்குவது வழக்கம். தொடர் விடுமுறையில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா சுற்றுலாபயணிகள் வந்து சென்ற நிலையில், வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை எதிர்பார்த்து காத்துள்ளனர் கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள்.