கொடைக்கானல்: அன்னை தெரசா பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தமிழக ஆளுநர் ரவி மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (நவ.6) காலை நடைபெற்ற விழாவில் மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி பாராட்டினார். கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (நவ.6) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. துணை வேந்தர் கே.கலா வரவேற்றார்.
பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒடிசா பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாஞ்சலி பேசியதாவது: அன்னை தெரசாவின் கூற்றுப்படி, கல்வியின் சாராம்சம் அறிவின் குவிப்பாக மட்டுமல்ல, இரக்கம், பணிவு மற்றும் சேவையை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.

கல்வி என்பது மாற்றத்திற்கான மிக சக்தி வாய்ந்த கருவி. இது தன்னம்பிக்கையை உருவாக்குகிறது. சுதந்திரத்தை வளர்க்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தொழில், நம்பிக்கைகள் மற்றும் சமூகத்திற்கு உங்கள் பங்களிப்பை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை கல்வி உங்களுக்கு வழங்குகிறது.
அதீத ஆர்வம் கொள்ளுங்கள், மீள் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உண்மையான தலைமை பண்பு என்பது மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவது அல்ல. அன்புடன் யாவரையும் தலைமை பண்பு உடையவர்களாக மாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், 58 மாணவிகளுக்கு முனைவர் பட்டமும், பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 19 மாணவிகள் உட்பட 376 பேருக்கு நேரடியாக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி பாராட்டினார். மேலும், 8,110 பேருக்கு அஞ்சல் வழியாக பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், பதிவாளர் (பொ) ஜெயப்பிரியா, தேர்வு கட்டுப்பாடு அலுவலர் கிளாரா தேன்மொழி, நிதி அலுவலர் (பொ) ஹெனா ஷரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பல்கலைக் கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் பங்கேற்கவில்லை. விழா முடிந்து, ஆளுநர் பிற்பகல் 3 மணிக்கு கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.