திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே கிளாவரையில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட திடீர் பிளவுக்கு நில அதிர்வு காரணமில்லை என புவியியல் துறையினர் திங்கட்கிழமை மாலை (இன்று) நடத்திய முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கடைசி கிராமமாக கிளாவரை உள்ளது. இக்கிராமத்தின் ஒரு பகுதியான கீழ் கிளாவரைப் பகுதிக்கு செருப்பனூத்து ஓடையில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். சில நாட்களாக தண்ணீர் வராததால் குழப்பம் அடைந்த மக்கள் செருப்பனூத்து ஓடை பகுதிக்கு செல்லும் வழியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என பார்க்கச் சென்றனர். அப்போது கீழ் கிளாவரை பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக செல்லும் போது கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் 300 அடி தூரத்துக்கு மேல் நிலத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நிலப் பிளவுக்கு நில அதிர்வா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கிளாவரை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு கட்டுப்பட்ட வந்தரேவு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் நேற்று (செப்.22) வனக்காவலர் தங்க பார்த்திபன், வனவர் ராஜ்குமார் ஆகியோர் நில பிளவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின், பிளவு ஏற்பட்ட பகுதி செருப்பனூத்து ஓடை வாய்க்காலில் இருந்து கிளாவரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் அமைந்துள்ள பகுதியாகும். மலைப்பகுதியில் மழை மற்றும் வெயில் காலங்களில் இம்மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுவது இயற்கை நிகழ்வாகும். நில அதிர்வு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராஜலிங்கம் கூறும் போது, “கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது வரை நில அதிர்வு பதிவுகள் ஏதும் பதிவாகவில்லை’’ என்றார்.
இருப்பினும் பொதுமக்களின் அச்சத்தை நீக்கும் வகையில் திங்கட்கிழமை மாலை (இன்று) கூனிப்பட்டி வனப்பகுதியில் திடீர் நிலப் பிளவுகள் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து சச்சிதானந்தம் எம்பி., செந்தில்குமார் எம்எல்ஏ., வட்டாட்சியர் கார்த்திகேயன், புவியியல் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்ய மண் மாதிரிகளை புவியியல் துறையினர் சேகரித்தனர்.
ஆய்வுக்குப் பின் அவர்கள் கூறும்போது, “கொடைக்கானல் மலைப் பகுதியில் நில அதிர்வு ஏதும் ஏற்படவில்லை. அதிக வெயில் மற்றும் மழை காரணமாக நிலத்தில் பிளவு ஏற்படுவது இயற்கையாகவே நடைபெறுவது தான். அதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மண் மாதிரி ஆய்வுக்கு பின் முழுமையான காரணங்கள் தெரிய வரும்” என்றனர்.