திண்டுக்கல்: கொடைக்கானல் மலைச்சாலையில் ‘டம் டம் பாறை’ அருகேயுள்ள எலிவால் நீர்வீழ்ச்சியில் மழைநீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் எழிலை கண்டு ரசித்து செல்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கோடை சீசன் மாதங்கள் மட்டுமின்றி, அனைத்து வாரவிடுமுறை நாட்கள், தொடர் விடுமுறைகளில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் செல்ல ஆர்வம் காட்டிவருகின்றனர்.
வத்தலகுண்டு அருகே காட்டுரோடு பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு மலைச்சாலை தொடங்குகிறது. இங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்திலேயே மலைச்சாலையில் டம் டம் பாறை அருகே நின்று பார்த்தால் காட்சியளிக்கிறது உயரமான எலிவால் நீர்வீழ்ச்சி. மலை முகட்டில் இருந்தும் கொட்டும் அருவியை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் சாலையோரம் நின்று இயற்கை எழில் காட்சியை ரசித்துச் செல்கின்றனர்.
எலிவால் நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சியின் மொத்தம் உயர 973 அடி. தமிழகத்தில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சிகளில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஆறாவது இடத்தில் உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்யும் மழை, பல பகுதிகளில் இருந்து வந்து ஒன்றிணைந்து எலிவால் நீர்வீழ்ச்சியில் கொட்டுகிறது.
ஆண்டுக்கு பெரும்பாலான மாதங்களில் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வீழ்ந்த போதும், கோடை காலத்தில் சில மாதங்கள் மட்டும் வறண்டு காணப்படும். இந்த நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் மலையடிவாரத்தில் உள்ள மஞ்சளார் அணையில் தேக்கப்படுகிறது. அணை நிரம்பியவுடன் இங்கிருந்து நீர் பாசனத்துக்கும், உபரி நீர் வைகை ஆற்றிலும் கலக்கிறது.
இந்த அருவியின் மேல் பகுதிக்கு செல்ல 12 கிலோ மீட்டர் தூரம் ஒற்றையடிப்பாதையில் ஆபத்தான பகுதியில் நடந்து செல்ல வேண்டும். இதனால் அங்கு யாரும் செல்வதில்லை.
எலிவால் நீர்வீழ்ச்சி துவங்கும் பகுதியில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். மலைச்சாலையில் வாகனங்களில் செல்லும் போது ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இந்த நீர்வீழ்ச்சியின் எழில் காட்சிகளை காணலாம். கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் டம் டம் பாறை அருகே காரை நிறுத்திவிட்டு அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான வாட்ச் டவரில் ஏறி நீர்வீழ்ச்சியின் இயற்கை எழிலை ரசித்துவிட்டும், புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.