கொடைக்கானல்: கொடைக்கானல் மக்களால் ‘ஜீப் மனிதர்’ என்று அழைக்கப்பட்ட ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹெரால்டு (80) என்பவர் உடல்நலக்குறைவால் புதன்கிழமை (ஆக.14) மாலை உயிரிழந்தார்.
சர்வதேச சுற்றுலா நகரான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அப்படி சுற்றுலா வந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹெரால்டு (80) என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக தான் சுற்றுலா வந்த ஜீப்பிலேயே வாழ்ந்து வந்தார். அக்கம் பக்கத்திலும் யாருடனும் பேசாமல் ஜீப்பில் இருந்து வெளியே வராமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
அவரின் செயல் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அவரைப் பற்றி கேள்விப்பட்ட சுற்றுலா பயணிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஹெரால்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று (ஆக.14) புதன்கிழமை மாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கொடைக்கானல் போலீஸார் கூறும்போது, “ஹெரால்டு என்பவருக்கு திண்டுக்கல் செம்பட்டி அருகே சொந்தமாக நிலம் உள்ளது. அவர் அடிக்கடி கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவார். வரும்போது ஜீப்பிலேயே தங்குவார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். விசாரணைக்கு பிறகே அவரைப் பற்றிய முழு விவரங்கள் தெரியவரும்,” என்றனர்.