கொட்டி தீர்த்த பலத்த மழை: குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு; மரங்கள் முறிந்து விழுந்தன | Heavy rain leads to landslide in coonoor

1325150.jpg
Spread the love

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது. உதகையில் சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. தற்போது விடுமுறை என்பதால் உதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

இன்று (அக்.13) பிற்பகலில் சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கொட்டு மழையில் அங்குள்ள மலர்களை கண்டு ரசித்தனர். குன்னூர் நகர பகுதி மட்டுமல்லாமல் அருவங்காடு, வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கரன்சி, காட்டேரி, பர்லியார், சேலாஸ், கொலக்கம்பை உட்பட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்கிறது.

இந்த மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே திடீர் மண் சரிவு ஏற்பட்டது. அத்துடன் சாலையில் மரங்களும் முறிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் குன்னூர் டி.எஸ்.பி. வீரபாண்டி, ஆய்வாளர் சதீஷ் மற்றும் தீயணைப்புத் துறையினர் அடங்கிய குழுவினர் ஜேசிபி இயந்திர உதவியுடன் மண் மற்றும் மரங்களை அகற்றினர்.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதேபோல் குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்கா, அடார் செல்லும் சாலையில் ராட்சத மரம் மின் கம்பி மீது விழுந்தது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணிநேரம் போராடி மரத்தை அகற்றினர். இதேபோல் ஆங்காங்கே மழைக்கு மரங்களும், மண்சரிவும் ஏற்பட்டது. இது போன்ற நேரங்களில் மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மிதவேகத்தில் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் என வருவாய்த்துறையினர், போலீஸார் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி கிண்ணக்கொரையில் அதிகபட்சமாக 51 மி.மீ., மழை பதிவானது.

கெத்தை 46, பாலகொலா 43, குந்தா 37, பர்லியாறு 35, கோடநாடு 34, குன்னூர் 30, கோத்தகிரி 22, கோத்தகிரி 18, அவலாஞ்சி 15, எமரால்டு 18, சேரங்கோடு 17, கேத்தி 16, எடப்பள்ளி 14, கீழ் கூடலூர் 12, ஓவேலி 11, நடுவட்டம் 10, அப்பர் பவானி 9, தேவாலா 9, பந்தலூர் 9, பாடந்தொரை 8, செருமுள்ளி 7, உலிக்கல் 7, கிளன்மார்கன் 7, உதகை 3.2 மி.மீ., மழை பதிவானது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *