மகாராஷ்டிரத்தின் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து, இன்றும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக மும்பையில் கனமழை பெய்துவருகிறது. பருவமழைக் காலம் தொடங்கியிருப்பதும், மும்பைக்கு மேலே காற்றழுத்த சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக காற்றுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொங்கன் பகுதியில் உள்ள தாணே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு பிரஹன்மும்பை மாநகராட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மும்பையின் சில பகுதிகளில் இன்று காலை மழை பெய்ததால், நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் நகரில் 61.69 மிமீ மழை பெய்துள்ளது. இன்று மாலை 4:39 மணியளவில் மும்பையில் 3.69 மீட்டர் உயரத்திற்கு ‘அதிக அலை’ எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்துள்ளனர்.
சனிக்கிழமை காலை தில்லியின் சில பகுதிகளில் மழை பெய்ததால், சாலைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.