1970-களில் வைகை அணை கட்டுவதற்காக, தேனி மாவட்டத்திலுள்ள சில கிராமங்களைக் காலி செய்து, அவற்றைக் கையகப்படுத்துகிறது அரசு. அதனால், அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், கஞ்சா கடத்துவது உள்ளிட்ட தவறான செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள்.
வைகை அணைக்கு அருகிலிருக்கும் பகுதியில் வசிக்கிறார் ரொக்கப்புலி (சரத்குமார்). அந்த ஊரின் காட்ஃபாதர்! ஒரு கட்டத்தில், தனிமையில் நிற்கும் கொம்புசீவி பாண்டிக்கு (சண்முகப் பாண்டியன்) ரொக்கப்புலி உதவி செய்கிறார். பிறகு ரொக்கப்புலியுடனேயே வந்து இணைந்துவிடுகிறார் பாண்டி.
அதனையடுத்து இருவரும் இணைந்து பல கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். பணத்தோடு, காவல் அதிகாரிகளுடனான பகை உள்ளிட்ட பல பிரச்னைகளையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்னை ரொக்கப்புலியையும், கொம்புசீவியையும் என்ன செய்தது என்பதுதான் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “கொம்புசீவி’ படத்தின் கதை.
கோபம், கெத்தான உடல்மொழி என மதுரை சம்பவக்காரராக நிமிர்ந்து நிற்கிறார் ‘கதையின் நாயகன்’ சரத்குமார். அதோடு ஆக்ஷன் களத்தில் துள்ளல் குறையாத புத்துணர்ச்சி, சீரியஸ் முகபாவனையை வைத்துக் கொண்டு செய்யும் நையாண்டிகள் எனக் கலகலப்புக்கும் கரம் தந்திருக்கிறார்! ஆனால், வெள்ளை தாடி, மீசை ஒப்பனை மட்டும் செயற்கையாகத் துருத்திக் கொண்டு நிற்கின்றன.