கொல்கத்தாவிடம் பணிந்தது: ஹைதராபாத் 3-வது தோல்வி!

Spread the love

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் விளையாடியது.

ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் அதிரடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. குயிண்டன் டி காக் 1 ரன்னிலும், சுனில் நரைன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. இருப்பினும், அஜிங்க்யா ரஹானே 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

ரஹானே ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ரகுவன்ஷியுடன் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரகுவன்ஷி 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கொல்கத்தா அணிக்காக 50-வது போட்டியில் விளையாடிய ரிங்கு சிங் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் முகமது ஷமி, பாட் கம்மின்ஸ், ஜீசன் அன்சாரி, ஹர்ஷல் படேல் மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய ஹைதராபாத் அணியால், கொல்கத்தாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. அந்த அணி 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால், கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

கடப்பாரை பேட்டிங் அணி என்று வர்ணிக்கக்கூடிய ஹைதராபாத் அணித் தரப்பில் அதிகபட்சமாக ஹெய்ன்ரிச் கிளாசன் 33 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 27 ரன்களும் எடுத்தனர், மற்றவர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளும், ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா, நரைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *