தெற்கு கொல்கத்தாவின் பாகாஜ்தீன் பகுதியிலுள்ள வித்யாசாகர் காலனியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இன்று(ஜன. 14) இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்தவித உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுவதற்கு சில நாள்கள் முன்னர், ஒருபக்கமாக சாயத் தொடங்கியதையடுத்து, அங்கு வசித்து வந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், கடந்த சில நாள்களாக அந்த கட்டடத்தின் அடித்தளத்தை பலமாக்க தேவையான கட்டுமானப் பணி மேற்கொள்ளப்ப்பட்டு வந்தது. இந்த நிலையில் கட்டடம் சரிந்து விழுந்துள்ளது.
குளம் இருந்த இடத்தை மண்ணால் நிரப்பி, அதன்பின் அந்த இடத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் அடித்தளம் சரியாக அமைக்கப்படாததால், கட்டடம் முற்றிலும் சரிந்து விழுந்துள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணையும் நடைபெற்று வருகிறது.