கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் 2 மணி நேரம் போராட்டம் | JIPMER doctors protest 2 hours condemning Kolkata woman doctor rape and murder

1294670.jpg
Spread the love

புதுச்சேரி: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து ஜிப்மரில் மருத்துவர்கள் இன்று (ஆக.13) 2 மணி நேரம் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று காலை போராட்டம் நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், பெண் படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும், தவறுக்கு பொறுப்பானவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், அனைத்து மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

2 மணி நேரம் நடந்த போராட்டத்தை தொடர்ந்து மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தடையின்றி இயங்கியது. அங்கே மூத்த மருத்துவர்கள் பணியில் இருந்தனர்.

தொடர்ந்து இன்று மாலை கடற்கரை சாலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்கும் அமைதிப் பேரணி காந்தி சிலையை நோக்கி நடைபெற இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *