கொல்கத்தாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களில் உடல்நிலை மோசமானதால் மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் கொல்கத்தாவில் அக்.5 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.
பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவா்களை தாக்கினால் உடனடி நடவடிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு 24 மணி நேரத்தில் நிறைவேற்ற தவறியதால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக அவா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கொல்கத்தா என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் புலஸ்தியா ஆச்சார்யா, உண்ணாவிரதத்தால் ஏற்படும் தீவிர வயிற்றுவலி மற்றும் வாந்தி போன்ற காரணங்களால் நேற்று (அக். 13) இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க | கொல்கத்தா அரசு மருத்துவமனையில் கும்பல் தாக்குதலால் பரபரப்பு
இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 இளம் மருத்துவர்கள் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல மருத்துவ மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் முதல்வர் மம்தா பானர்ஜி, அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருப்பது குறித்து மேற்கு வங்கத்தின் இளம் மருத்துவர்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
”இந்த விவகாரத்தில் முதல்வர மௌனம் காப்பது வேதனையளிக்கிறது. மாநில அரசு இந்தளவு மனிதாபிமானமற்றதாக இருக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று போராட்டத்தை முன்னின்று நடத்தும் மருத்துவர் தெபாசிஷ் ஹால்தர் தெரிவித்தார்.
ஹால்தரின் மனைவியான இளம் மருத்துவர் சிங்கதா ஹஸ்ராவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீதமுள்ள 6 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கொல்கத்தா விவகாரம்: அக். 15-ல் நாடு தழுவிய உண்ணாவிரதம்!
77 மூத்த மருத்துவர்கள் ராஜிநாமா செய்வதாக எச்சரிக்கை:
இந்த நிலையில், கொல்கத்தாவிலுள்ள கல்யாணி ஜே.என்.எம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள் 77 பேர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் மொத்தமாக ராஜிநாமா செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.