கொல்கத்தா மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவரின் பெற்றோர், நீதி வேண்டி முகநூல் பக்கத்தில் இன்று (டிச. 5) புதிய கணக்கைத் தொடங்கியுள்ளனர்.
கொல்கத்தாவில் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களுக்குப் பிறகும் இதுவரை நீதி கிடைக்காததால், பலியான மருத்துவரின் பெற்றோர் சமூகவலைதளப் பக்கத்தை கையில் எடுத்துள்ளனர்.
முகநூல் கணக்கில், உண்மை மற்றும் நீதி: ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவருக்காக குரல் கொடுப்போம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், புகைப்படத்தில் ஆர்ஜி கர் விவகாரத்தில் எங்களுக்கு நீதி வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த விவகாரத்தில் நீதி வேண்டி பயிற்சி மருத்துவர்கள் உள்பட மருத்துவத் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 4 மாதங்களாகியும் இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்காததால், உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் பெற்றோர் முகநூல் கணக்கைத் தொடங்கி, அதன்மூலம் நீதி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இதில் அவர்கள் வெளியிட்டுள்ள முதல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எங்கள் மகளுக்கு நீதி வேண்டும். நாங்கள் நிலையாக நிற்கிறோம்; ஆனால் தனித்து இதனை செய்ய முடியாது. உங்கள் குரல், உங்கள் ஆதரவு மற்றும் உங்கள் அன்பு அனைத்தையும் மாற்றும். ஒன்றுகூடி அநீதிக்கு எதிரான ஒளியாகத் திரள்வோம். நம்பிக்கையையும் பொறுப்புணர்வையும் நாம் ஒன்றிணைந்து பெறுவோம். தயைகூர்ந்து எங்களுடன் துணையாக இருங்கள். பகிருங்கள். பேசுங்கள். ஆதரவளியுங்கள் எனப் பதிவிட்டுள்ளனர்.
மேலும், 4 மாதங்களாகியும் தங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்காததைக் குறிப்பிட்டு விடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | இந்தியாவில் ரூ. 6000 கோடி முதலீடு செய்யும் சீன நிறுவனம்!