கொளத்தூர் தொகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு | Monsoon precautionary measure in Kolathur constituency

1289184.jpg
Spread the love

சென்னை: கொளத்தூர் தொகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தினார். முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, சிஎம்டிஏ, சென்னை குடிநீர் வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள், மழைநீர் வடிகால்கள், பள்ளிக் கட்டிடங்கள், பேருந்து நிலையம், மருத்துவமனை, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள், வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள், மின் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்குப் பருவமழை: அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கவும், தொகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மின்சார வாரிய தலைமை மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் சு.பிரபாகர், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *