“கொள்கை என்று வந்துவிட்டால் அண்ணன் என்ன; தம்பி என்ன?” – விஜய்யை விமர்சித்த சீமான் | NTK leader Seeman criticize TVK leader Vijay and their party policies

1334232.jpg
Spread the love

சென்னை: “தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் என்பது வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். நீ கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது. எனவே, அண்ணன் தம்பி என்பது வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான்.” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் ஐந்து குண்டுகளைத் தாங்கி மரணித்துக் கிடந்தபோது, பதறித்துடிப்பது தமிழ்த்தேசியம். அதேநேரம், சிறிதும் பதற்றம் இல்லாமல், பதவியேற்கும் திராவிடம். இரண்டும் ஒன்றா? திராவிடம் பெண்ணிய உரிமையைப் பேசும். ஆனால் தமிழ்த்தேசியம், பெண்ணிய உரிமையைக் கொடுக்கும், நிறைவேற்றும் . எனவே, இது இரண்டும் ஒன்று இல்லை. அப்படியிருக்கும்போது, எப்படி விஜய் இரண்டையும் தன்னுடைய கண் என்று கூறுவார்.

அதெப்படி சமம் ஆகும்? அதேபோல், இருமொழிக் கொள்கை என்கிறார். அடுத்தவர்கள் மொழி எப்படி எனக்கு கொள்கை மொழியாக இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான பேரை அம்மா என்று அழைக்கலாம். ஆனால், பெற்றவள் ஒருத்திதான். அதனால் எனக்கு கொள்கை மொழி என்னுடைய தாய்மொழி. தெலுங்கு, கன்னடா, பிஹாரி என அவரவருக்கு அவர்களுடைய தாய்மொழிதான் கொள்கை மொழியாக இருக்க முடியும். விரும்பி நாங்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்போம். உலக மொழிகளுக்கு எல்லாம் நாங்கள் பற்றாளர்கள். ஆனால், எங்கள் மொழிக்கு நாங்கள் உயிரானவர்கள்.

தமிழ்ப் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாடமொழி. இந்தி உட்பட உலகின் அனைத்து மொழிகளும் எங்களுடைய விருப்ப மொழி. விரும்பினால் கற்போம். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை. இருமொழிக் கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை. தமிழே எங்கள் மொழி என்பது தமிழ்த் தேசிய கொள்கை. திராவிடம் என்றால் என்ன? தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தவெகவைச் சேர்ந்த யார் இதற்கு விளக்கம் கூறுவார்கள்?

மதச்சார்பற்ற சமூக நீதி எப்படி? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு, EWS-க்கு 10 விழுக்காடு இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு, இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? எனவே, சமூக நீதி என்பதெல்லாம் சும்மா பேச்சு. திமுக கூடத்தான் வெகு நாட்களாக சமூகநீதி பேசுகிறது. அது ஜமுக்காள நீதி கூட கிடையாது. எங்கே இருக்கிறது நீதி? பெண்ணியம் உரிமை பேசும் திமுக அதை கொடுத்திருக்கிறதா?

தமிழக அமைச்சரவையில் சரிபாதி விழுக்காடு கொடுக்கப்பட்டிருக்கிறதா? ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் தமிழ்த்தேசியக் கோட்பாடு. பெண் விடுதலை இல்லையே, மண் விடுதலை இல்லை. இதுதான் தமிழ்த்தேசியம். மதுகடைகளை மூடச் சொல்வது தமிழ்த்தேசியம். தெருவுக்கு இரண்டு மதுகடைகளைத் திறப்பது திராவிடம். இரண்டும் ஒன்று என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். நீ கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது. எனவே, அண்ணன், தம்பி என்பது வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான்.” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *