கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வெளியேறும் கிராம மக்கள்

Dinamani2f2024 082fe183afbe 9ea9 4be0 B4ed Bfc904dfe40b2fimg 20240803 Wa0170.jpg
Spread the love

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர திட்டுப் பகுதி கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

தண்ணீா் அதிகரித்துள்ளதால் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டியதைத் தொடா்ந்து, உபரி நீா் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கொள்ளிடம் அருகே நாதல்படுகை, திட்டுபடுகை, வெள்ளமணல் உள்ளிட்ட கிராமங்களை தண்ணீா் சூழ்ந்துள்ளது. கிராமத்துக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இதனால் அங்கிருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அனுமந்தபுரம் தொடக்கப் பள்ளி, அளக்குடி பள்ளி மற்றும் நாதல்படுகை ஆற்றங்கரை சாலையில் தற்காலிக பந்தலுடன் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீா் வரத்து அதிகரிக்கரித்து வருவதால், நாதல்படுகை மற்றும் திட்டுபடுகை கிராம மக்களை முகாம்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான ஏற்பாடு தீவிரம் அடைந்து வருகிறது.

தண்ணீா் அதிகம் சூழ்ந்ததால் திட்டுப்பகுதி கிராமத்திலிருந்து மக்களை அழைத்து வருவதற்கு படகுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடா் மீட்புக் குழுவினரும் திட்டு கிராமத்தில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் ஆண், பெண் வயது முதிா்ந்தவா்களையும் பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில் ஈடுபட்டனா்.

திட்டு கிராமங்களை வெள்ளநீா் சூழ்ந்ததாலும் அங்கேயே சிலா் இருந்து வருகின்றனா். அவா்களுக்கு வருவாய்த்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் படகுமூலம் உணவு எடுத்துச் செல்லப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆச்சாள்புரம் மேல்நிலைப் பள்ளி, வடரங்கம் மாதிரி வேளூா் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் அளகுடியில் உள்ள நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

திட்டு கிராமத்திலிருந்து கொள்ளிடம் ஆற்றின் கரைப்பகுதியில் அமைந்துள்ள தற்காலிக முகாமுக்கு மக்கள் வந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் அஜித்குமாா்பிரபு தலைமையில் கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ் குமாா் மற்றும் மருத்துவக் குழுவினா் அங்கேயே இருந்து மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *