சென்னை: கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கோயில் காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானம் என்ற ஊரில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் இருக்கிறது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில், அதே ஊரைச் சேர்ந்த சங்கர பாண்டியன் (65) அருகில் உள்ள கோவிலூர் பேச்சிமுத்து (50) ஆகியோர் காவலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (10.11.2025) வழக்கம் போல இரவுப் பணியில் இருந்துள்ளனர்.
வழக்கம் போல 11.11.2025 ஆம் தேதி காலையில் கோவில் திறந்து பார்த்த போது, இரவுக் காவலர்கள் இருவரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் உடைத்து அகற்றப்பட்டு, கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்ட செய்தி தெரியவந்தது. ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல் துறை கண்டுபிடித்து, கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒருவர் சுட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட இரண்டு காவலர் குடும்பங்களும் மிக வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் என்பதை கருத்தில் கொண்டு, அந்தக் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கி உதவ வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.