ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் அருண் ரங்கராஜ் (38). ஐபிஎஸ் அதிகாரியான இவர்,2012-ல் கர்நாடக மாநிலம் கலாபுர்கிமாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது, உடன் பணிபுரிந்த பெண் உதவி ஆய்வாளருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அருண் ரங்கராஜின் மனைவி, கணவரைப் பிரிந்து சென்றார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம்பெண் உதவி ஆய்வாளருடன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அருண் ரங்கராஜ் வந்துள்ளார். அப்போது அவர்களிடையே ஏற்பட்டதகராறில், உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோபி போலீஸார் அருண் ரங்கராஜை கைது செய்தனர். பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சிலநாட்களுக்குப் பின்னர் பணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், கோபியில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்த அருண் ரங்கராஜை பார்ப்பதற்காக பெண் காவல் உதவி ஆய்வாளர் கடந்த 3 நாட்களுக்கு முன் வந்துள்ளார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட் டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜ், வீட்டுக்கு தீ வைத்து விட்டு, உள்ளேயே இருந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். மேலும், அங்கு வந்த கோபி காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் போலீஸார் வீட்டுக்குள் இருந்த, அருண் ரங்கராஜை மீட்க முயன்றனர்.
அப்போது அருண் ரங்கராஜ், காவல்ஆய்வாளர் காமராஜைத் தாக்கியுள்ளார். இதில் ஆய்வாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மற்ற போலீஸார் அருண் ரங்கராஜை மீட்டு, கோபி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடமும், பெண் உதவி ஆய்வாளரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அருண் ரங்கராஜை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர், கோவை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.