சென்னை: கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் கல்லூரி தொடங்க அனுமதிக்கும் மசோதாவை தாக்கல் செய்து தமிழக அரசு அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோயில் நிதி, கோயில்களுக்குச் சொந்தமான தங்க நகைகள், இடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. கோயில் சொத்துகளை கபளீகரம் செய்வதில் திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது? ‘சனாதன இந்து தர்மத்தை அழிப்பதே எங்கள் கொள்கை’என்று துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
அருகில் இருந்து அதை கைதட்டி வரவேற்றவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. அந்த கொள்கையை மறைமுகமாக நிறைவேற்றவே கோயில் சொத்துகளை அழிக்க இத்தகைய திட்டங்களை வகுக்கிறார். இந்த மசோதா சட்டவிரோதமானது. இதை ஏற்கக் கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிப்போம். இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.