கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 21-ல் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி | Demonstration across Tamil Nadu on July 21 demanding protection of temple properties – Hindu Front Announces

1281816.jpg
Spread the love

சென்னை: கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்து வருகின்ற 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் மாநில அரசின் பிடியில் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அந்த கோயில்களுக்கு பல லட்சம் நிலங்கள் இடங்கள் வீடுகள் இருக்கின்றன. கோயில்களின் வருமானம், கோயில் சொத்துக்களை பாதுகாக்க பராமரிக்க மட்டுமே தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது இந்து சமய அறநிலையத்துறை.

கடந்த சுமார் 75 ஆண்களாக தமிழகத்தை ஆண்டு வருகின்ற திராவிட அரசியல்வாதிகளால் பத்தாயிரம் கோயில்களும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் அழிக்கப்பட்டோ அல்லது காணாமலோ போனதாக இந்து சமய அறநிலையத் துறை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

மேலும் இந்து கோயில்களின் சொத்துக்களை பொது பயன்பாட்டுக்கு என கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நல துறைக்கு என பல வகைகளில் பகல் கொள்ளையாக கோயில் சொத்துக்களை அரசே கபளீகரம் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கோயில் சொத்துக்களுக்கு உரிய இழப்பீடோ வாடகையோகூட தருவதில்லை.

அதேசமயம் அரசு நிலங்களை விட அதிகமான நிலங்களை கிறிஸ்தவ மத ஸ்தாபனங்கள் வைத்துள்ளன. அவற்றில் ஒரு அங்குல நிலத்தை கூட பொது பயன்பாட்டுக்கு அரசு கையகப்படுத்தியது உண்டா? அதேபோல் மசூதிகளின் சொத்தாக கருதப்படும் வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க அரசு, தமிழர்களின் வரிப்பணத்தில் இருந்து அள்ளிக் கொடுத்து முஸ்லிம்களை கொண்டே நிர்வாகம் செய்ய வைக்கிறது.

ஒருபுறம் இந்து கோயில்களின் சொத்துக்களை அரசாங்கம் திட்டமிட்டு சூறையாடுகிறது. மறுபுறம் ஆக்கிரமித்து கோயில் நிலங்கள் காணாமல் போக அதிகாரிகள் அரசியல்வாதிகள் துணை போகின்றனர்.

பிரம்மாண்டமான கோயிலை நிர்மாணித்த நமது முன்னோர்கள் அதனை நிர்வகிக்க, பாதுகாக்க பல கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை இறைவன் பேரில் எழுதி வைத்துள்ளனர்.

நீதிமன்றமும் கோயில் சொத்துக்கள் கோயில் பயன்பாட்டுக்காக தான், அதனை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவது கூடாது என கூறியே வந்துள்ளது.

எனவே கோயில் சொத்துக்களை பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். கோயில் சொத்துக்களை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது.

கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்து வருகின்ற 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இதற்கு தமிழக மக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *