கோயில் திருவிழாவில் பக்தர்கள் கூடாரத்தை தாக்கிய யானைகள்! 3 பேர் பலி; 36 பேர் காயம்!

Dinamani2f2025 02 132fbs0tly7j2felepp.jpg
Spread the love

கோழிக்கோடு : கேரளத்தில் கோயில் திருவிழாவில் யானைகள் மதம் பிடித்து ஓடியதில் 3 பேர் பலியாகினர்.

கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி அருகேயுள்ள குருவங்காடு மணக்குளங்கரை பகவதி கோயிலில் வியாழக்கிழமை(பிப். 13) நடைபெற்ற திருவிழாவில் சுவாமி ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்டிருந்த இரு யானைகள் கோயில் குளம் அருகே வெடிக்கப்பட்ட பட்டாசு சத்தத்தைக் கேட்டதில் மிரண்டு போய், ஒரு யானையை இன்னொரு யானை தந்தத்தால் பலமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட பக்தர்கள் அச்சமடைந்து தப்பியோட முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே, பக்தர்கள் நின்றுகொண்டிருந்த கோயில் நிர்வாக அலுவலகக் கட்டடத்தை நோக்கிச் சென்ற ஒரு யானை, கட்டடத்தை பலமாக இடித்து சேதப்படுத்தியதில், கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து விழத்தொடங்கின. இந்த இடிபாடுகளுக்குள் ஏராளமான பக்தர்கள் சிக்கிக் கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்களை பத்திரமாக மீட்கப் போராடினர். எனினும், இந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடியோ இங்கே

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *