கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு | Civil court cannot hear case related to temple administration High Court bench

1342278.jpg
Spread the love

மதுரை: கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை ஆ.தெக்கூரைச் சேர்ந்த சிவன் கோயில் நிர்வாகி தணிகாசலம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆ.தெக்கூர் கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை நகரத்தார் சமூகத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இந்தக் கோயில் நகரத்தார் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்டது என அறநிலையத் துறை 1982-ல் அறிவித்தது.

கோயில் எதிரே அமைந்துள்ள ஊருணியை 48 பேர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதையடுத்து, சிவன் கோயில் நிர்வாகத்தை முடக்க ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். கோயிலில் நடைபெறும் திருமணம், காதுகுத்து போன்ற வைபவங்களின் வருமானத்தில் உரிமை கோரி திருப்பத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் கோயில் நிர்வாகம் விளக்கம் அளிக்குமாறு உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே, உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கோவிந்தராஜ், திலகவதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால், பழிவாங்கும் எண்ணத்தில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உரிமையியல் நீதிமன்றத்துக்கு, கோயில் நிர்வாகம் குறித்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை. கோயில் தொடர்பான வழக்கை, உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *