சென்னை: தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கோயில் நிலங்களில் இருந்து ரூ.198.65 கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டது குறித்து சேலம் சரக டிஐஜி நேரில் ஆஜராகி, விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் கனிம வளங்கள் கோடிக்கணக்கில் திருடப்பட்டு வருவதாக சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், கூடுதல் அரசு ப்ளீடர்கள் யு.பரணிதரன், ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி கிருஷ்ணகிரி மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.ஜோதிலட்சுமி சார்பில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘கோயில் நிலங்களில் உள்ள கனிம வள திருட்டு தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்துள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேஹூலி பட்டாளம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து மட்டும் ரூ.170 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள கனிமவளங்கள் திருடப்பட்டுள்ளது.
இதேபோல தேன்கனிக்கோட்டை நாகமங்கலத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து ரூ..28 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்குள் அறநிலையத் துறை அதிகாரிகள் செல்ல முடியாத அளவுக்கு சமூக விரோதிகள் தடுத்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களின் கனிம வளங்கள் திருடப்பட்டுள்ள விவகாரத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த திருட்டுகளில் காவல்துறை, வருவாய்துறை உள்ளிட்ட பிற துறைகளின் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. தேசத்துக்கு சொந்தமான சொத்துக்களை திருடுபவர்கள் மீது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஒருசில பேராசைக்காரர்களால் தேசத்தின் சொத்து கொள்ளையடிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
எனவே, இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களில் உள்ள கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க சேலம் சரக போலீஸ் டிஐஜி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாவட்டங்களில் கனிம வள குற்றங்கள் தொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்தும், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அவர் வரும் ஜூலை 26-ம் தேதியன்று நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டுள்ளார்.