புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் மலையாமருங்கா் கோயில், உருமநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் தனிநபா்களுக்கு வழங்கிய பட்டா ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சேதுபதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் கிராமத்தில் உள்ள மலையாமருங்கா் கோயில், உருமநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஸ்ரீரங்கப்பட்டி, கொம்பியன்வீதி, உடையாளபட்டி ஆகிய பகுதிகளில் உள்ளன. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பூசாரிகள், செயல் அலுவலா் இணைந்து தனி நபா்களுக்கு விற்பனை செய்தனா். கோயில் நிலத்துக்கு பூஜாரி முத்துக்கருப்பன் தனது பெயரில் முறைகேடாக பட்டா பெற்றுள்ளாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், தஞ்சாவூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா், கோயில் நிலத்துக்கு பட்டா பெற்ற பூசாரி மீது நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.
ஆனால், இதுவரை பூஜாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை, கோயில் நிலங்களும் மீட்கப்படவில்லை. எனவே, கோயில் நிலங்களை மீட்க உரிய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முகமது சபீக் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.அப்போது இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், மலையாமருங்கா் கோயில், உருமநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை தனி நபா்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலருக்கு, கோயில் செயல் அலுவலா் தரப்பில் கடிதம் அனுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக சம்பந்தப்பட்டோருக்கு குறிப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி, 3 மாதங்களில் கோயில் நிலத்தை மீட்பதற்கான
நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தாா்.