”கோயில் விழாக்களை திட்டமிட்டு தடுக்க முனைகிறது தமிழக அரசு”  – இந்து முன்னணி குற்றச்சாட்டு | hindu munnani accuse tamilnadu government

1324665.jpg
Spread the love

சென்னை: “நெல்லை தசரா சப்பரத் திருவிழாவை தடுக்கும் நோக்கில் தமிழக மின்சாரத்துறை செயல்படுகிறது’’ என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன்கோயில் தசரா சப்பரம் வீதி உலா வரும்போது மின்சார கம்பிகளில் பட்டு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல என்று மின்சார வாரியம் கடிதம் கொடுத்துள்ளது. மேலும், பல ஆண்டு காலமாக வரும் சப்பரத்தின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாக்களில் ஒன்றான பாளையங்கோட்டை தசரா திருவிழாவில் 12 கோயில்களை சேர்ந்த சப்பரங்கள் ஒரு சேர திருவீதி உலா வந்து சூரசம்ஹாரம் நிகழ்வு நடப்பது தொன்று தொட்டு நடந்து வரும் திருவிழாவாகும். கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி மிக விமர்சையாக வழக்கம் போல் அனைத்து கோயில்களிலும் திருவிழா நடந்து வரும் சூழலில் நேற்று பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோயில் தலைவருக்கு மின்வாரியத்தில் இருந்து கடிதம் மூலம் சப்பரத்தின் உயரத்தை குறைக்க வேண்டும் என்றும் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் அதற்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்தும் திருவிழாக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செய்ய வேண்டிய வேலையை இதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்று குறிப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்துக்கள் ஒற்றுமையாக வழிபடும் திருவிழாவை திட்டமிட்டு மறைமுகமாக அரசு இதுபோல் தடுக்க நினைக்கிறதோ என்ற ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்து விரோத திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகமெங்கும் பல கோயில் திருவிழாக்களில் சுவாமி தேரும் சப்பரங்களும் விபத்துக்குள்ளாவது அதிகமாக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு இயந்திரங்கள் ஒன்றிணைந்து செயல்படாததே முழுமுதற் காரணமாகும். அதுபோல் ஏதேனும் விபத்துக்கள் நேர்ந்தால் நாங்கள் முன்பே சொல்லி விட்டோம் என்று தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே அரசு அதிகாரிகள் தயாராக உள்ளனர். தவிர எவ்வாறு திருவிழாக்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டமிடுவதற்கு தயாராக இல்லையே என்று சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

பல பகுதிகளில் திருவிழாவின்போது நடக்கும் சிறுசிறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அத்திருவிழாக்களுக்கே தடை விதிக்கும் போக்கும் திமுக அரசிடம் அதிகமாக உள்ளது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவி திருக்கோயிலில் இரண்டு முறை நீதிமன்றம் சொன்ன பின்பும் திருவிழாவை நடத்துவதற்கு மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் எந்த முனைப்பும் எடுக்காத நிலையில் மாநில அரசை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்த பின்பே அத்திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் முன்னின்று நடத்தினார்.

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல கோவில் திருவிழாக்களை சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி சாதி ரீதியாக பிரச்சினைகள் உள்ளதாகச் சொல்லி திருவிழாக்களுக்கு அனுமதி மறுத்து பின்பு மக்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று திருவிழா நடத்தும் சூழல் நிலவி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் என்ன பிரச்சினைகளாக இருந்தாலும் அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி திருவிழாவினை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக கோயிலின் சப்பரம் இதே திருவீதிகளில் தான் உலா வருகிறது. இதுவரையில் எந்த பிரச்சினைகளும் நடக்காத நிலையில் இவ்வாண்டு சப்பரத்தின் அளவை குறைக்கச் சொல்லி மின்வாரியம் நோட்டீஸ் வழங்கி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி அங்குள்ள சாலைகளை சீரமைக்கும் போது பழைய சாலைகளை அகற்றாமல் அதற்கு மேலேயே மீண்டும் மீண்டும் புதிய சாலைகள் போடுவதால் தான் சாலை உயர்கிறது. இம்மாதிரியான விபத்துக்கள் நிகழும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதற்கு சாலையை சுரண்டி விட்டு சாலை போடாமல், சப்பரத்தின் உயரத்தை குறைக்க சொல்லும் திராவிடம் மாடல் அரசினை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. சமீபத்தில் விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் அரசு துறை நிர்வாகம் இணைந்து பணி செய்யாமல் 5 பேர் உயிரிழக்க காரணமாக ஆனது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். எனவே அதனை கவனத்தில் கொண்டு இத்திருவிழா வழக்கம் போல் சிறப்பாக நடைபெற அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு வழங்கிட தமிழக அரசு ஆணையிட இந்து முன்னணி வலியுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *