விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு குவிந்த பக்தர்கள். கோவிந்தா.. கோவிந்தா… கோஷங்களுக்கு நடுவே பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். இங்கு கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத் தேரோட்டம் மிக முக்கியமான திருவிழா. அதற்கு அடுத்தபடியாக மார்கழி மாதம் தமிழ்த் திருவிழாவாகிய பகல் பத்து, இராப்பத்து மற்றும் ஆண்டாள் மார்கழி நீராட்டு (எண்ணெய்க் காப்பு) உற்சவம் ஆண்டுதோறும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி நேற்றுடன் பகல்பத்து உற்சவம் நிறைவடைந்தது. இராப்பத்து உற்சவத்தின் ஆரம்ப நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்களின் “கோவிந்தா… கோவிந்தா…” என்ற கோஷங்களோடு, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க, சொர்க்கவாசல் வழியாகப் பெரிய பெருமாள், அவரைத் தொடர்ந்து ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்தப் பரமபத வாசல் திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.