கோவைக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அசாம் முதல்வர் வலியுறுத்தல் | Bangladeshis infiltrating Coimbatore

1303689.jpg
Spread the love

புதுடெல்லி: சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச அகதிகள், தமிழ்நாட்டில் கோவையை குறிவைத்து அங்குள்ள ஜவுளித் தொழிற்சாலைகளில் வேலையில் சேர முயல்வதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இத்தகைய சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வாசர்மா கூறியதாவது: வங்கதேசத்தில் கலவரச் சூழல் உருவாகியுள்ள நிலையில், அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். கடந்த 27-ம் தேதி அசாம் எல்லை வழியாகநுழைய முயன்ற 3 வங்கதேச அகதிகளை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி மீண்டும் அவர்களை வங்கதேசத்துக்கு அனுப்பியுள்ளனர். இதுவரையில் அசாம் வழியாக நுழைய முயன்ற 50 வங்கதேச அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் திரிபுராவிலும் அகதிகள் தடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரனையில், அவர்கள் தமிழ்நாட்டுக்கு நுழைய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கோவை மாநகரத்தில் உள்ள ஜவுளிதொழிற்சாலைகளில் வேலையில் சேரும் நோக்கில் அவர்கள் இந்தியாவுக்குள் நுழைகின்றனர்.

எனவே, சமீபத்தில் கோவை ஜவுளி தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேர்ந்தவர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு சோதனை செய்ய வேண்டும்.

வங்கதேசத்திலிருந்து அகதிகள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தற்போதைய கலவரச் சூழல் காரணமாக, வங்கதேசஇந்துக்கள்தான் இந்தியாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அரசியல் அகதிகள் வரவில்லை. பொருளாதார அகதிகள் வருகின்றனர். இதுவரையில், தடுக்கப்பட்ட ஊடுருவல்காரர்கள் வெறும் 10 சதவீதம்தான். எனவே இது குறித்து, விசாரணை நடத்திதீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வங்கதேசத்தில் கலவரம்காரணமாக பல ஜவுளித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அங்கு வேலையிழந்த தொழிலாளர்கள் தமிழகத்துக்கு வந்து கோவையில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் வேலையில் சேர முயல்வதாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் கோவை ஜவுளித் துறையில் வேலைக்குச் சேர்ந்தவர்களின் விவரங்களை சோதனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஹிமந்தா பிஸ்வா சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை, திருப்பூரில் கண்காணிப்பு தீவிரம்: கோவை மாநகர காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள், சங்கங்கள், அவர்களிடம் ஆட்களை வேலைக்கு அழைத்து வரும் ஏஜென்சிகள் போன்றோரிடம் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவினர் தொடர்பில் உள்ளனர். எனவே, சந்தேகத்துக்குரிய நபர்கள் யாராவது வந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் கிடைத்து விடும். எங்களது கண்காணிப்புப் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி கூறுகையில், “பின்னலாடை தொழிலை நம்பி ஏராளமான வடமாநிலத்தவர்கள் திருப்பூரில் பணிபுரிகிறார்கள். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றும் இடங்களில், வங்கதேசத்தினர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகரில் கட்டிட உரிமையாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் யாருக்கேனும், தங்களிடத்தில் தங்கி இருப்பவர்கள் வங்கதேசத்தினர் என்ற சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *