கோவையில் ‘அல் உம்மா’ இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உடல் அடக்கம் | Al Ummah movement leader sabasha body Burial in Coimbatore

1343673.jpg
Spread the love

கோவை: கோவையில் உடல்நலக்குறைவால் காலமான அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் உடல் இன்று (டிச.17) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் இறுதியில், கோவை தெற்கு உக்கடம், பொன்விழா நகரில் உள்ள, ரோஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.பாஷா(84) கைது செய்யப்பட்டார். இவர், தடை செய்ப்பட்ட அல்-உம்மா இயக்கத்தின் தலைவராவார். தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், கோவை மத்தியசிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.ஏ.பாஷா அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி பாஷாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி, அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு 30 நாட்கள் நீதிமன்றம் பிணை வழங்கியது.

பள்ளி வாசல் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார்.

பின்னர் அது நீட்டிக்கப்பட்டது. வெளியே வந்த அவர் ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். பின்னர், வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி எஸ்.ஏ.பாஷாவுக்கு மீண்டும் வயோதிகத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு போலீஸார் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.16) அவர் உயிரிழந்தார். தொடர்ந்து உயிரிழந்த பாஷாவின் உடல், ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று (டிச.17) அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் உமர்பாரூக் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவரது உடல் வாகனத்தின் மூலம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஹைதர்அலி திப்பு சுல்தான் பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று (டிச.17) மாலை அடக்கம் செய்யப்பட்டது. பாஷா மறைவைத் தொடர்ந்து மாநகரில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைக்காக 2 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *