கோவையில் ஐ.டி நிறுவனம் திடீர் மூடல்: 3,000 பேரின் வாழ்வாதாரம் காக்க தவாக வலியுறுத்தல் | Coimbatore it firm lay off 3000 employees tamizhaga vazhvuriamai katchi question

1348725.jpg
Spread the love

சென்னை: கோவையில் திடீரென மூடப்பட்ட ஐ.டி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்நிறுவனத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுக்கவும் வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “போக்கஸ் எஜூமேட்டிக் பிரைவேட் என்ற தொழில்நுட்ப நிறுவனம், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல், கோவை ஆர்.எஸ்.புரம் – தடாகம் சாலையில் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணியாற்றி வந்தனர். இப்பணியாளர்கள், அமெரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இணைய வாயிலாக பாடம் கற்பித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு நாளுக்கு முன்னதாக மின்னஞ்சல் மூலமாக, யாருக்கும் பணிக்கு வர வேண்டாம் என்று தகவல் அளித்து விட்டு, அந்நிறுவனத்தை இழுத்து மூடியிருக்கிறது நிர்வாகம். குறிப்பாக, ஜனவரி 26-ஆம் தேதி வரை பணியாற்றியதற்கான ஊதியம் கூட வழங்கப்படவில்லை. இதனால், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கோவை மாவட்ட ஆட்சியரை நாடி மனு அளித்திருக்கின்றனர்.

இதன் மூலம், முடிந்த அளவுக்கு உழைப்புச் சுரண்டலை மேற்கொண்டதோடு, கடைசியில் நிறுவனத்தை மொத்தமாக இழுத்து மூடிவிட்டு தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டிருக்கிறது நிர்வாகம். தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்துவிட்டு பின்னர், நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு நிரந்தர மற்றும் இதர தொழிலாளர்களையும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளியது.

எனவே, தொழிலாளர்களைச் சுரண்டி லாபம் பார்த்து அதனைச் சுருட்டிக்கொண்டு ஓடிய நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்க, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *