கோவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வரும் நாள்களில் மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் அக்டோபர் 3 முதல் 5 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் கோவையில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம் போன்ற பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு பின் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தின், பல்வேறு பகுதிகளிலும் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கோவையில் இன்று அதிகாலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 1:00 மணி முதல் கோவை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அப்போது, பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.