கோவை: கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியுள்ளது. இன்று (ஜூலை 18-ம் தேதி) காலை வினாடிக்கு 18 ஆயிரம் முதல் 21 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் மதகுகள் வழியே வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்றாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம், சித்திரைச்சாவடி அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்கடம் பெரியகுளத்தில் நீர்வரத்து குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோவை மாவட்டத்தில் சராசரியாக 32.87 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. கோவை மாநகராட்சி சார்பில் பேரூர் ராஜவாய்க்கால் பகுதி தூர்வாரப்பட்டதால் மழைநீர் சிராக செல்கிறது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் கோவைக்கு ஆரஞ்ச் மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.