கோவை: கோவை அருகே மக்களுக்கும், விளை நிலங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி வந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் இன்று அதிகாலை கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை மக்களுக்கும் விளை நிலங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி வந்தது.
மக்களால் ரோலக்ஸ் என பெயரிடப்பட்ட அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது மருத்துவரை யானை தாக்கியது.
டாப்ஸ்லிப் மற்றும் முதுமலை பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 3 கும்கி யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் யானையை பிடிக்க தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.