கோவையில் ரூ.300 கோடியில் தந்தை பெரியார் நூலகம், அறிவியல் மையம்: கட்டுமானப் பணியை தொடங்கி வைத்த முதல்வர் | Stalin inaugurated the construction of Periyar Library and Science Center at Rs 300 crore in Coimbatore

1336173.jpg
Spread the love

கோவை: தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கோவை காந்திபுரத்தில் உள்ள அனுப்பர்பாளையம் கிராமத்தில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுரடி பரப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணி இன்று (நவ.6) தொடங்கப்பட்டது. இவ்விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கோவையில் தான் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டது. இன்று இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறேன். கோவைக்கு இதுவரை 3 முறை வந்து, பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டு திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன்.

கடந்த 3 ஆண்டுகளில் அறிவித்த அறிவிப்புகளின் நிலை குறித்து அமைச்சர்களை ஆய்வு செய்யச் செல்ல அறிவித்து, முதலீடுகள் ஈர்ப்புக்காக அமெரிக்கா சென்றேன். அங்கிருந்து வந்த பின்பு அமைச்சர்களிடம் திட்டங்களின் நிலை குறித்து கேட்டதோடு, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்யும் பணிகளை கோவையில் இருந்து துவங்கியுள்ளேன்.

நேற்று முதல் கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டுள்ளோம். கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம்பேக் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. தடையெல்லாம் தகர்த்து வந்துள்ளார் செந்தில் பாலாஜி. கோவையில் நூலகத்தோடு சேர்ந்து அறிவியல் மையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. கோவையில் தந்தை பெரியார் பெயரில் இந்நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும்.

சென்னையில் அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் உள்ளது போல கோவையில் இந்த பெரியார் நூலகம் உருவாகவுள்ளது. இதன் திறப்பு விழா ஜனவரி, 2026-ல் நடைபெறவுள்ளது. நேற்று எல்காட் நிறுவனத்தின் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தேன். அதுவும் விரைந்து முடிக்கப்பட்டு ஜூன் மாதம் திறக்கப்படும்.

சென்னையின் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மதுரை கலைஞர் நூல்கம், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் ஆகியவை குறித்த காலத்தில் இந்த ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கோவையில் 35 ஆண்டு கால பிரச்சினையாக இருந்த நில விடுவிப்பு கோரிக்கைக்கு நேற்று ஆணைகள் வழங்கப்பட்டு, 10 ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

தங்க நகை தொழிலாளர்கள் குறைகளை கேட்டறிந்து நேரடியாக அவர்களின் இடத்திற்குச் சென்றேன். உலக அளவில் முக்கிய தங்க நகை மையமாக விளங்கும் கோவையில் தொழில் பூங்கா அமைக்கப்படும் அதில் ஆய்வகமும் அமையவுள்ளது. இதனால், அதிக வேலைவாய்ப்பு உருவாகும். விமான நிலைய விரிவாக்கம், சூலூரில் தொழில் மையம் மற்றும் கோவையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக மேற்கு புறவழிச்சாலை, குடிநீர் திட்டங்கள், பாதாளச் சாக்கடை திட்டங்கள் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதியான கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கவுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப மையமாக கோவை உள்ளது. கோவை எல்காட் வளாகத்தில் 17.17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு ஐடி பூங்கா அமைக்கப்படும். இதனால் 31 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

சின்னியம்பாளையம் முதல் நீலாம்பர் வரை 5 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலை நீட்டிக்கப்படும். தொண்டாமுத்தூரில் யானை புகாத வகையில் நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும். ஆனைமலை கூட்டு குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும். 295 பொள்ளாச்சி கிராமங்களுக்காக கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்.

கோவை மாநகரில் புனரமைக்கப்படாத சாலைகள், பாதாளச் சாக்கடையால் பாதிப்படைந்த சாலைகள், மண் சாலைகள் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, மக்களுக்கான பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு, தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து, சிறந்த மாநிலமாக உள்ளது. இப்போது, தெற்கு தான் வடக்கிற்கும் வாரி வழங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *