கோவை, ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர்: இவருக்குக் கடிதம் எழுதினால் கவலை தீரும் தலம்!

Spread the love

சிவத்தலங்களில் பழைமையானவை சிதம்பரமும் திருவாரூரும். இவற்றுக்கு இணையான தலம் ஒன்று உண்டு. கரிகாலச்சோழன் தன் தோஷம் தீர கொங்கு தேசத்தில் 36 சிவாலயங்களை எழுப்பினான் என்கிறது பட்டயம்.

அப்படி அவன் எழுப்பிய ஓர் ஆலயத்தில் வாழும் ஈசனுக்கு புற்றிடங்கொண்டீசர் என்பது திருநாமம். கொங்குப் பகுதியில் பேரூர் பட்டீஸ்வரம், வெள்ளலூர் தேனீஸ்வரர் ஆகிய தலங்களுக்கு இணையான மகிமை கொண்ட அத்தலத்தின் சிறப்புகளைக் காண்போம்.

கோவையிலிருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில், பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ளது ஒத்தக்கால் மண்டபம். இந்தப் பகுதியில் அநேக கோயில்கள் அமைதிருப்பதால் இதற்குக் `கோயில்களின் கிராமம்’ என்ற சிறப்புப் பெயரே உண்டு.

ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர் கோயில் பூங்கோதை நாயகி
ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர் கோயில் பூங்கோதை நாயகி

பொதுவாக பாம்பு, புற்று, பசு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட சிவாலயங்கள் மிகவும் புராதன மானவை என்பார்கள். அவ்வகையில் கொங்கு நாட்டில் அமைந்த இந்தக் கோயிலும் மிகப் பழைமையானது.

புற்றின் அருகே லிங்க மூர்த்தமாக எழுந்தருளியதால், இத்தல இறைவனுக்குப் புற்றிடங்கொண்டீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதாம்.

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு அவர்களால் நன்கு பராமரிக்கப்பட்ட இந்த ஆலயம், கால வெள்ளத்தில் படையெடுப்புகளின் காரணமாகப் பராமரிப்பு இல்லாமல் சிதிலமுற்றதாம். பிற்காலத்தில் இப்பகுதி பக்தர்கள் ஒன்றிணைந்து, ஆலயத்தைப் புனரமைத்தார்கள் என்கிறது தலவரலாறு.

கிழக்கு நோக்கிய திருக்கோயில்; ஐந்துநிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் கொடிக்கம்பம், நந்தி தரிசனம். மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை எனும் அமைப்புடன் திகழ்கிறது புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயம். கருவறையில் சதுர வடிவ ஆவுடையார் – நாகாபரணத்துடன், மலர் அலங்காரத்தில் காட்சி தருகிறார் ஈசன்.

பொதுவாகவே சதுரவடிவ ஆவுடையார் என்பதே மிகவும் பழைமையான சுவாமி என்பதற்கு ஒரு சான்று என்பார்கள். புற்றிடங்கொண்டீஸ்வரரை மனமுருக தரிசித்து வேண்டிக்கொண்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்கிறார்கள். அந்தச் சந்நிதியில் பக்தியோடு நிற்கும்போதே நாம் நம்மை மறந்து கண்ணீர் பெருக்குவதை உணரமுடியும்.

மூலவர் சந்நிதிக்கு வடக்கே பூங்கோதை நாயகியின் சந்நிதி. மேற்கரங்களில் நீல மலரையும் தாமரை மலரையும் ஏந்தியபடி, கீழிரு கரங்களால் அபய-வரத முத்திரைகளைக் காட்டி அருள்கிறாள் இந்த அம்பிகை. இவளை வணங்கினால் சகல மங்கலங்களும் உண்டாகும் என்கிறார்கள்.

ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர் கோயில்
ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர் கோயில்

மகா மண்டபத்தில் தெற்குச் சுவரை ஒட்டி 63 நாயன்மார்களைத் தரிசிக்கலாம். திருச்சுற்றில் தென்மேற்கில் பிள்ளையாரும் வடமேற்கில் முருகப்பெருமானும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். முருகன் சந்நிதிக்கு முன் அருளும் லிங்கேஸ்வரருக்குப் பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபடலாம்.

மேலும், திருச்சுற்றில் தென்முகக் கடவுள், அண்ணாமலையார், நான்முகன், துர்கை, நடராஜர், பைரவர் ஆகியோரும் அருளுகின்றனர். இந்தக் கோயிலில் விருட்சத்தின் கீழ் புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது.

அதில் பசு ஒன்று லிங்கத்துக்குப் பால் பொழிந்து அபிஷேகம் செய்ய, அருகில் புலி ஒன்று கம்பீரமாக வீற்றிருக்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காட்சி மிகவும் தத்ரூபமாக அமைந்திருப்பதை நம்மால் ரசிக்க முடியும்.

இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று பிரார்த்தனைப் பெட்டி. உறையூர் வெக்காளி, விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் போன்ற ஆலயங்களில் சுவாமிக்கு நாம் நம் குறைகளை எழுதிக் கட்டும் வழக்கம் உள்ளது.

அவ்வாறு எழுதும் நம் குறைகள் விரைவில் தீர்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோன்று இங்கும் ஒரு பிரார்த்தனைப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெட்டியில் பக்தர்கள் தங்களின் குறைகளையும், நியாயமான கோரிக்கைகளையும் விண்ணப்பமாக எழுதி போடுகின்றனர். இந்தக் கடிதங்கள் நாள்தோறும் இறைவனிடம் சமர்ப்பிக்கப் படுகின்றன. அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் தங்களின் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறுவதாகச் சொல்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள்.

ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர் கோயில் முருகன்

இத்தல இறைவன் மீது திருவெழுக் கூற்றிருக்கையும், திருத்தாண்டகமும், பூங்கோதை நாயகியின் மீது பிள்ளைத் தமிழும் பாடப்பட்டுள்ளன. இங்கே தினமும் மாலையில் 1008 போற்றிகள் ஓதப்படுகின்றன.

சித்திரைத் திருவிழா இங்கே விமர்சியாக நடைபெறும். விசேஷ வேள்விகள், அபிஷேக வழிபாடுகள், திருவீதியுலா, தேரோட்டம் என விழா களைகட்டும். பொதுவாக சிவத்தலங்களில் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தத் தலத்தில் மாதம்தோறும் பெளர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது சிறப்பு.

இந்த ஈசனிடம் வழிபட்டால் மனச் சஞ்சலங்கள் விலகும். திருமணத் தடை நீங்கி விரைவில் மணமாலை கூடிவரும். அன்னை பூங்கோதை நாயகியின் திருவருளால் பிள்ளைப் பாக்கியம் வேண்டுவோருக்கு மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோவை செல்பவர்கள் வாய்ப்பிருந்தால் இராயிரம் ஆண்டுப் பழைமையான இந்த ஈசனின் சந்நிதியைத் தரிசித்து வாருங்கள். வாழ்வில் வளமும் நலமும் கிடைக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *