கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கோவை அவிநாசி சாலையில், புதிதாக திறக்கப்பட்டு உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம் தொடங்கும் இடமான உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேம்பாலத்தை விட்டு கீழே இறங்கும் வாகன ஓட்டிகளுக்கு எப்படி செல்வது என்ற வழி தெரியவில்லை.
அத்துடன் மேம் பாலத்தில் செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள். இதுதான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் ஆகும். உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் சிக்னல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பழைய அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ரவுண்டானாவில் நேராக எல்ஐசி சந்திப்பு சென்று யு-டேர்ன் செய்து வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. சிக்னல் நடைமுறைக்கு வந்ததும், முன்பு உள்ளதுபோன்று அனுமதிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை தடுக்க சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
அவர்கள் சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி தருவதாக கூறி உள்ளனர். அதன் பின்னர் கண்டிப்பாக போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும். அவிநாசி சாலை மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் 30 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாக செல்லக்கூடாது.
அதை கண்காணிக்க மேம்பாலத்தின் மீது குறிப்பிட்ட பகுதிகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மேம்பாலத்தின் மீது அதிவேகமாக சென்றால் கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.