கோவை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இந்த முறைகேட்டை கண்டித்து சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தை முற்றுகையிட சென்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை மாட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அறிவித்தார். இதையடுத்து கோவை மாநகர் மாவட்ட பாஜக ரத்தினபுரி மண்டல தலைவர் அர்ஜூனன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு புதன்கிழமை மாலை சென்றனர்.
பின்னர், அவர்கள் அந்த கடையின் முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பாஜகவினர் 9 பேரை கைது செய்து, அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்தனர்.
இதைக் கண்டித்து பாஜக நிர்வாகிகள் அந்த தனியார் மண்டபம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி பாஜகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிறிது நேரத்துக்கு பிறகு, கைதான 9 பேரும் விடுவிக்கப்பட்டனர்.